வண்டலூர் உயிரியல் பூங்காவில் முன்னறிவிப்பு செய்யாமல் டிக்கெட் கவுன்டர்கள் மூடல்: பணம் கொடுத்து டிக்கெட் பெற முடியாததால் பயணிகள் தவிப்பு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முன்னறிவிப்பு இன்றி டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளன. சுவரில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதற்கான கியூஆர் கோடு ஒட்டப்பட்டு இருப்பதால் ஆன்ட்ராய்டு போன் வசதி இல்லாத சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
மேலும் கோடை மற்றும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து விலங்குகள், பறவை இனங்களை ரசித்து செல்வது உண்டு. அப்போது, பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களாக எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஆன்லைன் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே குறைந்த விலையில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக விலை ஏற்றப்பட்டு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ₹200ம், 5 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடந்த 3 நாட்களாக டிக்கெட் கவுன்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு, டிக்கெட் கவுன்டர்களின் சுவரில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பணம் கொடுத்து டிக்கெட் பெற முடியாதவர்கள், உள்ளூர் மற்றும் தொலைதூரத்தில் இருந்து வரும் முதியோர்கள், ஆன்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்கள் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, இதுபோன்று தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நேரடியாக பணம் கொடுத்து டிக்கெட் பெறும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் முன்னறிவிப்பு செய்யாமல் டிக்கெட் கவுன்டர்கள் மூடல்: பணம் கொடுத்து டிக்கெட் பெற முடியாததால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: