சென்னையை கலக்கி வந்த பாஜவை சேர்ந்த நில மாபியா கும்பல் தலைவன் கைது: வங்கி கணக்கில் பல கோடி நிதி வந்தது அம்பலம்

சென்னை: சென்னையை கலக்கி வந்த நில மாபியா கும்பல் தலைவனை போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் பத்திரப்பதிவு அதிகாரிகளை மிரட்டியதாக போலி பத்திரிகையாளர் வராகியை போலீசார் கைது செய்தனர்.வராகியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ.50 லட்சம் வரை பாஜவைச் சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்தது தெரியவந்தது.

இதனால் வராகிக்கு அவ்வளவு பணத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. விசாரித்தபோது, வராகி அதிகாரிகளை மிரட்டி பணிய வைத்தவுடன் முருகன் மூலம் போலி ஆவணங்களைக் கொண்டு நிலங்களை போலியாக பதிவு செய்து, மற்றவர்களுக்கு விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் முருகன் குறித்து விசாரணை நடத்தியபோது மத்தியக் குற்றப்பிரிவு போலீசுக்கு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நில அபகரிப்பு கும்பல்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக தாம்பரம், ஆவடி மாநகர எல்லை பகுதிகளில் தற்போது நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்ளும் நில அபகரிப்பு கும்பல்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், யாரும் தேடாத சொத்துகளை கண்டறிந்து போலியான ஆட்கள் மூலம், நிலத்தின் உரிமையாளர் என்று கூறி விற்பனை செய்வது, பத்திரப்பதிவு அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு போலியான ஆவணங்களை பதிவு செய்வது என்று பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல தான் முருகனும், ஆட்கள் இல்லாத இடங்களை தேர்வு செய்து போலி ஆவணம் மூலம் கைப்பற்றுவது போன்றவற்றை செய்து வருவது தெரியவந்தது. சென்னையில் ஏராளமான பத்திரங்களை சில ரவுடிகள் மற்றும் கும்பல்களுடன் சேர்ந்து போலியான பத்திரப்பதிவுகளை செய்திருப்பது தெரியவந்தது. அதேபோல வராகியுடன் இணைந்து முருகன் ஏராளமான போலி ஆவணங்களை தாம்பரம், சேலையூர், பல்லாவரம், குன்றத்தூர் ஆகிய இடங்களில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் முருகனை அதிரடியாக, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஏராளமான நிறுவனங்களை பெயருக்கு அவர் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாடுகளில் இருந்து பணம் கோடி கோடியாக குவிந்துள்ளது. இதற்காக போலியான பெயரில் டிராஸ்ட் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.

இந்த டிரஸ்ட்டில் வரும் பணம் மூலம் ஏராளமான இடங்களை போலியாக பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது டிரஸ்ட்டுக்கு பணம் வந்ததைக் கண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முருகன் தற்போது பாஜவில் உள்ளார். பாஜவில் மூத்த தலைவர்கள் பலருடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த ரவுடிகள் துணையுடன் நில அபகரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் எவ்வளவு நிலங்களை இதுபோல போலி ஆவணங்கள் மூலம் சுருட்டினார், இதற்கு உடந்தையாக இருப்பது யார், பணம் கொடுப்பது யார் என்ற விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post சென்னையை கலக்கி வந்த பாஜவை சேர்ந்த நில மாபியா கும்பல் தலைவன் கைது: வங்கி கணக்கில் பல கோடி நிதி வந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: