கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா: டிச.31, ஜன. 1ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது

சென்னை: கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25வது ஆண்டு நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருக்கிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆற்றிய உரை:

வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக – தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் கலைஞர். சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. அதை கொண்டாடுகின்ற விதமாக டிச.31, ஜன.1 ஆகிய நாட்களில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

* அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே 3டி லேசர் காட்சி ஏற்பாடு செய்யப்படும்.

* வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணைய கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்படும்.

* வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாக திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும்.

* அனைத்து மாவட்ட நூலகங்களிலும், அன்றைய நாள் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு, திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.

* திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

* டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியில் இருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக, வருக என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா: டிச.31, ஜன. 1ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: