பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் சத்துணவு ஊழியர்கள் பசியோடு இருக்க கூடாது: உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் உருக்கம்

நாகப்பட்டினம்: ‘எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் சத்துணவு ஊழியர்கள் பசியோடு இருக்க கூடாது‘ என போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கமாக கூறினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில், மாணவர்களின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள 50 சதவீத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதி உள்ள ஊழியர்களை விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 10 லிருந்து 30 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் வழியாக காரில் சென்ற அமைச்சர், காரை நிறுத்தி இறங்கி உண்ணாவிரதம் இருந்து வரும் சத்துணவு ஊழியர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர், ‘‘எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் சத்துணவு ஊழியர்கள் உணவு அருந்தாமல் பசியோடு இருக்க கூடாது.

உங்களது கோரிக்கைகள் குறித்து முதல்வர், துறை சார்ந்த அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு தெரிவிக்கப்படும். திராவிட மாடல் அரசு உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். போராட்டம் நடத்துவது உங்களின் உரிமை. உங்களது மாநில நிர்வாகிகள் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்று உருக்கமாக கூறினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சத்துணவு ஊழியர்களை சந்தித்து பேசியது போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் சத்துணவு ஊழியர்கள் பசியோடு இருக்க கூடாது: உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: