ராணிப்பேட்டையில் மாணவர்கள் நடனமாடி அசத்தல் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

*அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் தொடங்கியது. விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதன் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் 81 வகை போட்டிகளில் பள்ளி அளவில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 81 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி அளவில் நடந்த போட்டியில் 8,156 மாணவர்கள் வெற்றி பெற்று ஒன்றிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். பின்னர் அதில் வெற்றி பெற்ற 1,542 மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த கலைப்போட்டியில் கலந்து கொண்டனர். அதன்படி, மாவட்ட அளவிலான கலைதிருவிழா போட்டி நேற்று ராணிப்பேட்டை விஆர்வி பள்ளியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார்.

ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா, துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டியினை தொடங்கிவைத்து நாடகத்தினை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர் வினோத், பள்ளி தலைமை ஆசிரியர் ஈவ்லின் சத்யபாமா உள்பட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவின் கலை, இசை பாடல், இசைக்கருவிகள் போன்ற போட்டிகளும், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வகையான நடன போட்டிகளும், ராணிப்பேட்டை விஆர்வி பள்ளியில் அனைத்து வகையான நாடகங்களும் நடைபெறுகிறது என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராணிப்பேட்டையில் மாணவர்கள் நடனமாடி அசத்தல் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: