தொப்பூர் கணவாயில் விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கை

*4 மொழிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாய் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க சுங்கச்சாவடி மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் மலைப்பாதை வழியாக கன்னியாகுமரி-காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலை வனப்பகுதியில் சுமார் 6 கி.மீ தொலைவு வரை யூ மற்றும் எஸ் வளைவுகளாகவும், மேடு,பள்ளங்களாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக பாரங்களை ஏற்றி கொண்டு வரும் கனரக வாகனங்கள், வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் போலீஸ் குடியிருப்பு வரை, வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் விபத்தில் சிக்குகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023 வரை தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 8,250 விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதில் பெரிய அளவில் 256 விபத்துக்களும், 688 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், 13,475 பேர் காயமடைந்துள்ளனர்.

தொப்பூர் நெடுஞ்சாலையில், விபத்துகளை குறைக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம், சுங்கச்சாவடி நிர்வாகம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. முதல் கட்டமாக தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் 30 கி.மீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளக்கல், கட்டைமேடு, தொப்பூர் கணவாய் ஆகிய பகுதிகளில் ஒலிபெருக்கி வைத்து, 4 மொழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அதிக விபத்துகள் ஏற்படும் கட்டைமேடு, யூ வடிவிலான சாலை பகுதிகளில், எல்இடி லைட்டுகள் மூலமும் இரவு நேரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கட்டைமேடு பகுதியில், கனரக வாகனங்களை நிறுத்தி வேகம் (ஏர் பிரேக்) பரிசோதனை செய்து, 8 பாய்ண்ட் அதிகரித்த பின்பு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தொப்பூர் கணவாய் பகுதியில், வாரத்திற்கு 6 விபத்துகள் நடந்த நிலையில், தற்போது 3 விபத்துகளாக குறைந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரை 131 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 146 பேர் காயம் அடைந்தனர்.

இதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே, ஸ்பீடு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கல் பகுதியில், ரோந்து போலீசார் வாகனம் நிற்பது போன்று போலியாக வைத்துள்ளனர். இதனால் இந்த வழியாக வரும் கனரக வாகனங்கள், வேகத்தை குறைத்து மெதுவாக செல்வார்கள் என சுங்கச்சாவடி பணியாளர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி வாகன ஓட்டிகள் கூறியதாவது: தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், சுங்கச்சாவடி நிர்வாகமும் இணைந்து பல்வேறு கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விபத்துகள் ஓரளவு குறைந்தாலும், வாரத்திற்கு 3 மற்றும் 4 விபத்துகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் இடமாக, தொப்பூர் கணவாய் மாறி உள்ளது.

தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே விபத்து ஏற்பட்டால், காயம் அடைந்தவர்களை மீட்க வெள்ளக்கல் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ செல்ல வேண்டும். அதற்குள் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் நிற்பதால், ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் எதிர்திசையில் வந்தாலும், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே, சுங்கச்சாவடி நிர்வாகம் மூலம் மற்றொரு ஆம்புலன்ஸை நிறுத்துவதன் மூலம், தொப்பூர் காவல் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post தொப்பூர் கணவாயில் விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: