* ஆந்திர, தமிழக பக்தர்கள் பயன்பெறுவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் : செங்கோட்டையில் இருந்து வில்லிபுத்தூர் வழியாக திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் தித்திக்கும் பால்கோவாவிற்கு மட்டுமல்ல, பக்தி மணம் கமழும் ஆண்டாள் கோயிலுக்கும் சிறப்பு பெற்றது. ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியான வில்லிபுத்தூருக்கும் திருவேங்கடம் உடையான் சீனிவாச பெருமாள் இருக்கும் திருப்பதிக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஆன்மீக நகரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பாக ஐதராபாத், கீழ் திருப்பதி என ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஆண்டாள் கோயிலில் திருவிழா என்றால் ஆந்திரா, ெதலங்கானா மாநிலங்களில் இருந்து 100 முதல் 200 பேர் வரை பல்வேறு குழுக்களாக வில்லிபுத்தூருக்கு வந்து 10 நாட்கள் தங்கி இருந்து நிகழ்ச்சிகளை பார்த்து விட்டுச் செல்வார்கள். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்று முடி காணிக்கை செலுத்தி விட்டு பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். இவர்கள் திருப்பதி செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. மதுரை, சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயில் மூலம் திருப்பதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி – தாம்பரம், கொல்லம் ரயில், மேட்டுபாளையம் – செங்கோட்டை என வாரத்திற்கு சுமார் 18 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக இத்தனை ரயில்கள் இயக்கப்பட்டாலும் முக்கிய ஆன்மீக நகரமான திருப்பதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக எந்த ரயிலும் இயக்கப்படுவது இல்லை. எனவே நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜர் கூறுகையில், ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் திருப்பதியில் இருக்கும் பெருமாளுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. ஆடிப்பூர திருவிழாவின் போது வில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதியில் இருந்து மங்களப் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அதேபோல் பிரமோற்சவ விழாவின் ஐந்தாவது நாள் ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு திருப்பதியில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதற்கு பின்னர் தான் கருட சேவை நிகழ்ச்சியே தொடங்கும். ஆகவே இங்குள்ள பக்தர்கள் திருப்பதிக்கு செல்வதை எளிதாக்கும் வகையில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மார்க்கமாக ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்’’ என்றார்.
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் முருகன் கூறுகையில், ‘‘நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாதம் ஒரு முறை திருப்பதி சென்று வருகிறேன். என்னுடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இதில் வயதானவர்களும் இருக்கின்றனர். மேலும் திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் குழுவாகச் செல்வோம். நாங்கள் பிரமோற்சவத்தின் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை திருப்பதியில் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவோம்.
நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை சென்று அல்லது ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை எனில் சென்னை சென்று அங்கிருந்து திருப்பதிக்கு சென்று திரும்பும் சூழல் உள்ளது. பெரும்பாலான நாட்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே பயணம் செய்து திருப்பதிக்கு சென்று வருகிறோம். செங்கோட்டை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மார்க்கமாக ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கினால் மாதந்தோறும் திருப்பதிக்கு செல்லும் எங்களை போன்ற பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வடமாநில பக்தர்களுக்கும் பயனளிக்கும்’’ என்றார்.
இதற்கிடையே சிவகாசி எம்எல்ஏ அசோகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தாவை சந்தித்து திருப்பதிக்கு பக்தர்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் ஆண்டாள் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதிக்கு அறிமுகம் ஆகுமா ஆண்டாள் எக்ஸ்பிரஸ்? appeared first on Dinakaran.