முத்துப்பேட்டை,நவ. 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 723-வது வருட பெரிய கந்தூரி விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நாளான பத்தாம் இரவு இன்று 12-ந்தேதி நள்ளிரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
முன்னதாக இரவு 2-மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடம் தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து இரவு 2.30 மணிக்கு தர்காவிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்குகிறது. சந்தனக்கூடு ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை 3 முறை சுற்றி வந்தடைகிறது. அதிகாலை 5-மணிக்கு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தி புனித சந்தன கூடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.
ஊர்வலத்திற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தர்கா நிர்வாகம் செய்துள்ளனர். சந்தனக்கூட்டிற்கு தேவையான பொருட்களை வரவழைக்கப்பட்டு சந்தனக்கூடு தயார் செய்யும் பணியில் கடந்த சில தினங்களாக அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சந்தனக்கூடு விழாவைக் காண வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளியூரிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் சிறப்பு அரசு பேருந்துகள் மற்றும் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் தீவிர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை 13-ந்தேதி மாலை 04.30 மணிக்கு உள்ளுர்மக்களுக்காக அந்தி கூடு ஊர்வலம் நடைபெறுகிறது, 14-ம் நாள் இறுதிநாளான வரும் 16-ந்தேதி புனித கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாளை 13ந்தேதி திருவாரூர; மாவட்டத்திற்கு அரசு சார்பில் உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மேலும் சுற்று பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
The post முத்துப்பேட்டை தர்கா புனித சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.