நீடாமங்கலம், டிச. 22: நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் கடவுச்சாலை மேம்பாலம் கட்டும் பணியினை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீடாமங்கலம் ரயில்வே கடவுச்சாலை மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்றுவருவதை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உடனிருந்தார்.
நீடாமங்கலத்தில் ரெயில்வே கடவு எண் 20 மற்றும் கடவு எண் 1க்கு பதிலாக கட்டப்படும் சாலை மேம்பாலம் கட்டுமானப்பணி ரூ.170.00 கோடிக்கு சிஆர்ஜஎப் சேதுபந்தன் திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டு, தற்சமயம் முதற்கட்டமாக நெடுஞ்சாலைப்பகுதி ரூ.80 கோடி ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் இறுதிகட்ட நிலையில் உள்ளன. இரண்டாம் கட்டமாக கடவு எண் 20 மற்றும் கடவு எண் 1க்கான ரெயில்வே கண் மற்றும் இணைப்பு நெடுஞ்சாலைப் பகுதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து, நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கிராமம், நீடாமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட மேலபூவனூர் என்ற இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள இடத்தினை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மற்றும் அலுவலர்க்ள உடனிருந்தனர்.
