ராணுவ தொழில்பூங்காவில் வழித்தடம் கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு

 

கோவை, நவ. 12: கோவை மாவட்டம் சூலூர் வாரப்பட்டியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பில் 350 ஏக்கரில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, அங்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அந்த சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு சூலூர் எம்எல்ஏ கந்தசாமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சூலூர் வாரப்பட்டி கிராமத்தில் டிட்கோ நிறுவனம் சார்பில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. இந்த தொழில் பூங்கா அமைய உள்ள பகுதிக்கு அருகே சுமார் 100 ஏக்கரில் விவசாயம் நடந்தது வருகிறது.

இந்த விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை எங்கள் முன்னோர்கள் காலம் முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த விவசாய பூமிக்கு செல்லும் பாதையை டிட்கோ நிறுவனம் எடுக்க உள்ளதாக தெரிகிறது. அப்படி செய்தால், எங்களுக்கு விவசாய நிலத்திற்குள் செல்ல வேறு வழியில்லை. எனவே, விவசாயிகள் செல்லும் பாதைக்கு இடையூறு இல்லாமல், தொழிற் பூங்காவின் வழியாக தென்பகுதியில் ரோட்டில் இருந்து 40 அடி அகலத்தில் பாதை அமைத்து தர வேண்டும். விவசாயிகளுக்கான வழித்தடத்தை உறுதி செய்ய பிறகு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ராணுவ தொழில்பூங்காவில் வழித்தடம் கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: