சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 3 விமானங்களில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: பெண்கள் உட்பட 25 குருவிகள் கைது

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இரவு 11 மணிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த பயணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நள்ளிரவில் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மற்றும் அதிகாலையில் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த 3 விமானங்களில் வந்த பயணிகளில் 25 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர்களை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரித்தனர். அதோடு அவர்கள் உடைமைகளிலும் சோதனையிட்டனர். இந்த சோதனையில், அவர்கள் தங்கக் கட்டிகள், தங்க பசைகள் மற்றும் தங்க செயின்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்த 25 பயணிகளில் 8 பேர் பெண் பயணிகள். இவர்கள் அனைவரும் சென்னை உள்பட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதில் கடத்தல் பயணிகள் 25 பேரிடம் இருந்து மொத்தம் சுமார் 20 கிலோ சுத்தமான 24 கேரட் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.

இந்த கடத்தல் குருவிகள் 25 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள முக்கிய கடத்தல் ஆசாமிகள் சிலர், இவர்களை சிங்கப்பூருக்கு கடத்தல் குருவிகளாக அனுப்பி தங்கத்தை கடத்தி வந்ததாகவும், ஒரே விமானத்தில் வந்தால், சுங்கச் சோதனையில் மொத்தமாக சிக்கி விடுவார்கள் என்பதற்காக, 3 விமானங்களில் வந்ததும் தெரிய வந்தது. இவர்களில் ஒரு பெண் உள்பட 2 பயணிகளிடம் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கம் இருந்தது. மற்ற 23 பயணிகளிடமும் ஒரு கிலோவுக்கு குறைவாகவே தங்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, இப்படி தங்கம் கடத்தி வந்த சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையினர் உள்பட வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாள் இரவில், சிங்கப்பூரிலிருந்து வந்த 3 விமானங்களில் 25 கடத்தல் பயணிகளிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்புடைய 20 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 3 விமானங்களில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: பெண்கள் உட்பட 25 குருவிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: