குடிக்க பணம் தராததால் ஆத்திரம் வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய சித்தப்பா

துரைபாக்கம்: விழுப்புரம் மாவட்டம் மாரணோடை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (34). இவர் கடந்த 2 வாரத்திற்கு முன்பு சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 17வது தெருவில் உள்ள பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் ரஞ்சித்குமாரின் சித்தப்பாவான ஆரோக்கியதாஸ் என்பவர் ரஞ்சித்குமாரை பார்க்க வந்துள்ளார். முழு குடிபோதையில் இருந்த அவர் பேக்கரிக்குச் சென்று ரஞ்சித்குமாரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

அப்போது ரஞ்சித்குமார் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறவே இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ், ரஞ்சித்குமாரை தாக்கி அவரது கீழ் உதட்டை கடித்துத் துப்பினார்.  இதில் அதிகளவு ரத்தம் வெளியேறி ரஞ்சித்குமார் மயக்கமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (43) என்பவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குடிக்க பணம் தராததால் ஆத்திரம் வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய சித்தப்பா appeared first on Dinakaran.

Related Stories: