ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறந்த பள்ளியாக கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கமுதி இக்பால் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பட்டியலை தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரக தேர்வு குழுவால் 38 மாவட்டத்திலும் தலா மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் கடலாடி வட்டம், ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், கமுதி இக்பால் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியும் தேர்வாகியுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் திருப்புல்லாணி வட்டம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட மூவரும் வரும் நவ.14ம் தேதி சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெற்றுக்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: