சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயார்: ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை

சென்னை: சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக, புதிய தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன.

கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகன சட்டம் 380ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128ன்படியும் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 2748 வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், கேட்பாரற்றும் நிறுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மீது வழக்குகள் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பின்னர் வாகனம் குறித்த தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதிலிருந்து 30 நாட்களுக்குள் வாகனங்களை எடுத்துக்கொள்ள உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அதன் பிறகும் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சியால் ஏலம் விடப்படும். இதேபோல், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோர போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வாகனங்களை நிறுத்துவதற்காக தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக் நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5200 இடங்களில் சென்னை மாநகராட்சியால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பார்க்கிங் பிரச்னை நீடிக்கிறது. அரசு போக்குவரத்துத் துறையின் புள்ளி விவரங்களின்படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் மட்டுமே இயங்குகின்றன. இதனால் சென்னை மாநகர சாலைகளில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த வாகனங்களை எல்லாம் நிறுத்துவதற்குப் போதுமான இடவசதியும் கிடையாது. பெரும்பாலும் தங்கள் வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலையே உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் சாலையோரங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக, புதிய தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பெருநகர ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானவை. இவை வணிக வளாகங்களுடன் கூடிய பார்க்கிங் வசதியாக அமைக்கப்படவுள்ளது.
குறிப்பாக பார்க்கிங் அமைக்க 15 மண்டலங்களை வடக்கு, தெற்கு என 2 பிரிவுகளாக பிரித்துள்ளோம். மண்டலம் 1-8 வரை ஒன்றும், மண்டலம் 9-15 வரை மற்றொன்று என்றும் பிரித்துள்ளோம்.

இதில் எந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதோ, அங்கு இடங்களை தேர்வு செய்து விரிவான ஆய்வை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம், ஆன் ஸ்ட்ரீட் பார்க்கிங் என்ற வசதியை அறிமுகம் செய்தது. ஆனால் சரியான முறையில் கையாளப்படாத காரணத்தால் பலனளிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒரு விஷயத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் கையில் எடுத்துள்ளது.

அதாவது, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் சந்தையின் போக்கு ஆகியவை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனங்கள் முன்வரலாம். வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையத்திற்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

* சாத்தியக்கூறுகள் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பழுதடைந்துள்ள வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு புதிதாக 3 முதல் 4 மாடிகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்படும். அங்கு வணிக வளாகங்களுடன் கூடிய பார்க்கிங் வசதி அமைக்க இட வசதி உள்ளதா, சாலை இணைப்பு வசதி, பொதுமக்களுக்கான வசதி, போக்குவரத்து வசதி, பொருளாதார செயல்பாடு குறித்து ஆலோசகர்கள் விரிவான ஆய்வை மேற்கொள்கின்றனர். வரைவு சாத்தியக்கூறுகள் ஆலோசகர்களால் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துகள்/ பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவை இறுதி செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்காக அனுப்பப்படும்.

* கூடுதல் இடங்கள்
பார்க்கிங் கட்டணம் மூலம் தற்போது தினமும் ரூ.1.5 லட்சம் வரை மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடக்கம்.

The post சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயார்: ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: