கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ெதரிவித்துள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2024-2025ம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய கல்லூரி மாணாக்கர்கள், வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்). சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம்.

கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.1.2025 ஆகும் என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: