வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி மழைநீர் தேங்காத இடமாக தற்போது மாறியது எப்படி? அசத்தல் திட்டம் குறித்து மாநகராட்சி விளக்கம்

சென்னை, நவ.10: வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளிலேயே பெரிய அளவில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மழை வந்தது. 24 மணி நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. ஆனாலும் 2, 3 மணிநேரத்திற்கு பிறகு எந்த இடத்திலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபிறகு சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை போன்ற துறைகள் மிகப்பெரிய பணிகளை மேற்கொண்டதால் மழைநீர் தேங்கவில்லை. சென்னை மாநகராட்சி எடுத்த அதிதீவிர நடவடிக்கையில் ஏராளமான மோட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, எங்கெல்லாம் பாதிப்பு இருந்ததோ, அங்கு அந்த பாதிப்புகள் அகற்றப்பட்டு, பொது மக்கள் பெருமூச்சு விட்டனர்.

மழை எப்போது வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிண்டி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்போது 4 குளங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் சராசரியாக 1 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். இது போன்ற குளங்கள் உருவாகிற போது மழை நீரை அங்கே தேக்கி வைப்பதற்கும், கோடை காலங்களில் நிலத்தடி நீர் சாதாரணமாக கிடைப்பதற்கும், உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வேளச்சேரியில் ஏறத்தாழ 5 ஏக்கர் நிலம், 20,000 சதுர மீட்டர் அளவுள்ள ஆக்கிரமிப்புக்குள்ளான இடங்கள் மீட்கப்பட்டு அந்த இடங்களில் இப்போது புதிய குளங்கள் தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சுமார் 13,800 சதுர மீட்டர் பரப்பளவுக்கு குளம் தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த பணி முடிவுற்றவுடன் நிச்சயம் அங்கே 1.25 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கின்ற ஒரு மிகபெரிய குளமாக இருக்கும்.

வேளச்சேரியில் ஏறத்தாழ ஒரு 5 வட்டங்கள் இருக்கிறது, 172, 175, 176, 177, 178 என்று 5 வட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நகர்கள், ஏஜிஎஸ் காலனி, விஜிபி செல்வா காலனி, உதயா நகர், இப்படி ஏராளமான நகர்கள் அங்கே இருக்கிறது. அந்த நகர்களெல்லாம் இன்று மழை நீர் பாதிப்பு இல்லாமல், கடந்த மழைக்கு பெரிய அளவில் தப்பித்தது. வேளச்சேரி என்பது கடந்த காலங்களில் மழை வந்தால் வெள்ளச்சேரி என்று அழைக்கப்படுகின்ற நிலை இருந்தது, தற்போது அந்த நிலையில் இருந்து அது மாறுபட்டு இருக்கிறது. செங்கல்பட்டில் உள்ள 40 ஏரிகளிலிருந்து மழைநீர் இந்த பகுதிகளில் இருந்து உபரியாக வந்து பெரும்பாக்கம் வழியாக வந்து, சதுப்பு நிலத்தின் வழியே, ஒக்கியம் மடுவுக்குச் சென்று, ஒக்கியம் மடுவிலிருந்து கடலுக்குச் செல்வதென்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறையும் ஆறு போல் குடியிருப்புகளுக்குச் சென்று மூழ்கடிக்கும் நிலையில் இருந்தது.

இங்கே நீர்வளத்துறை கால்வாய்களை கட்டி அதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளது, என்றாலும் சதுப்பு நிலத்திலிருக்கிற உபரிநீரை ஒக்கியம் மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் சேர்ப்பதற்கு ஒக்கிய மடுவை ஒரு இடத்தில், அதை அகலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே ஒரு தனியார் கல்லூரியில் அவர்களுக்கு சொந்தமான பட்டா இடத்தை அகலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியும், நீர்வளத்துறையும், அந்த பணியை செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது மழைநீர் தேங்காத இடமாக வேளச்சேரி மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பை தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தம், மணிமாறன், பாஸ்கரன் உடனிருந்தனர்.

The post வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி மழைநீர் தேங்காத இடமாக தற்போது மாறியது எப்படி? அசத்தல் திட்டம் குறித்து மாநகராட்சி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: