தமிழ்நாட்டில் சுமார் 20,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 20,000 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 20,138 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாத செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும், அடுத்த மாதமும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அதன் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது. இதனிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

50 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல்வலி, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணியலாம் எனவும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் சுமார் 20,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Related Stories: