இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு பூதத்தாழ்வாரின் அவதார உற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக தலசயன பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றதால், இந்த பூதத்தாழ்வாரின் அவதார உற்சவம் நடைபெறவில்லை. பின்னர், அனைத்து திருப்பணிகளும் முடிந்து, கடந்த பிப்ரவரி 1ம் தேதி தலசயன பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பூதத்தாழ்வாரின் 10 நாள் அவதார உற்சவ விழா கடந்த 31ம் தேதி மிகச் சிறப்பாக துவங்கியது. இதைத் தொடர்ந்து பூதத்தாழ்வாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வீதியுலா நடந்தன. இதையடுத்து, 9ம் நாளான இன்று காலை பூதத்தாழ்வாரின் அவதார திருவிழா தேரோட்டம் துவங்கியது. 4 மாட வீதிகளின் வழியே ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டி கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்.
அனைத்து பக்தர்களுக்கும் வழிநெடுகிலும் நீர்மோர், அன்னதான பிரசாதங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இத்தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மகிழ்ந்தனர். சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பஜனை குழுவினருடன் கோவிந்தா என சொல்லியபடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
The post தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.