சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு

கயத்தாறு, நவ. 8: சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி மமக அறிவித்த சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம், சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டது. கயத்தாறில் இருந்து தேவர்குளம் செல்லும் சாலையின் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சர்வீஸ் சாலை, கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்தது. இதனை சீர்செய்ய பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுங்கச்சாவடியினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்மத் உசேன் தலைமையில் சுங்கச்சாவடி அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை, நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சுந்தர ராகவன் தலைமை வகித்தார். சுங்கச்சாவடி பொறுப்பாளர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர், மமக மாவட்ட செயலாளர் அஸ்மத் உசேன், கயத்தாறு பேரூர் தலைவர் சையத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது லத்தீப், அய்யனாரூத்து அலியார், அய்யனார் ஊத்து பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, கோவில்பட்டி பொறுப்பாளர் செண்பகராஜ், மானங்காத்தான் ஜமாஅத் தலைவர் அப்துல்காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதையேற்று தற்காலிகமாக சுங்கச்சாவடி அலுவலக முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது.

The post சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு பின் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: