தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளிநாட்டு பயணிகளை கவர லண்டனில் கண்காட்சி அரங்கம் திறப்பு

சென்னை: இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தற்போது விளங்கி வருகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச அலைச்சறுக்கு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டுள்ளன.

தற்போது, சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடந்த பார்முலா 4 கார் பந்தயம் சென்னை நகரின் பெயரை உலக விளையாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம்பெறச் செய்ததுடன் தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளிநாட்டு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச பட்டம்விடும் திருவிழா, சென்னை விழா, மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறது.

இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021ல் 11,53,36,719 ஆக இருந்து 2022ல் 21,85,84,846 ஆகவும், 2023ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 20,61,78,685 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக உலக பயண சந்தை என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கண்காட்சியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளையுடன் காளையை தழுவி நிற்கும் வீரனின் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஆங்கிலத்தில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

லண்டனில் நடந்து வரும் இந்த கண்காட்சியில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் சந்தரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் லண்டனுக்கான இந்திய தூதர் ஸ்ரீ விக்ரம் குமார் துரைசுவாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

* சமூக வலைதளங்கள் வாயிலாக குறும்படங்கள்..
தமிழ்நாட்டில் உள்ள பழமையான சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் குறித்த கழுகு கண்பார்வை அனுபவத்தையும், சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டதைப் போன்ற அனுபவங்களையும் தரும் வகையிலான குறும்படங்கள் உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளை எளிதில் சென்றடையும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

The post தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளிநாட்டு பயணிகளை கவர லண்டனில் கண்காட்சி அரங்கம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: