×

திருமலையில் கடும் பனிமூட்டம் கடும் குளிரிலும் ஏழுமலையான் தரிசனத்துக்கு திரளும் பக்தர்கள்: ஒரே நாளில் ரூ.4.23 கோடி காணிக்கை

திருமலை: திருமலையில் கடும் பனிமூட்டத்தால், கடும் குளிர்காற்று வீசினாலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு திரளுகின்றனர். இதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பக்தர்கள் ரூ.4.23 கோடி காணிக்கை செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை முழுவதும் மேககூட்டங்கள், பனிமூட்டம் சூழ்ந்து சில்லென குளிர்காற்று வீசி வருகிறது. ஆனாலும் பக்தர்கள் திருமலையில் திரண்டு வருகின்றனர். நேற்று மதியம் 12 மணிக்கு பிறகும் பனி மூட்டம் குறையாமல் இருந்தது. கடும் குளிரிலும் அதிகாலை முதலே அதிகளவில் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கு வந்த பக்தர்கள் பக்தி சூழலில் இயற்கை அழகை கண்டுகளித்து தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 209 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 708 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் கோயில் உண்டியலில் ரூ.4.23 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

* கடைக்குள் பதுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே உள்ள ஒரு கடையில் பழைய பொருட்கள் வைத்திருந்தனர். அந்த அறையில் இருந்து நேற்று சத்தம் வருவதை கவனித்த கடை உரிமையாளர் அங்கு பெரிய மலைப்பாம்பு இருப்பதை பார்த்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக தேவஸ்தானத்தில் பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் அங்கு சென்று பாம்பை பிடித்தார். பின்னர் அதனை பையில் வைத்து கொண்டு அவ்வாச்சாரி கோணா பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டார். மலைப்பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் 12 அடி நீளமுள்ள மலை பாம்பை பார்த்து அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

The post திருமலையில் கடும் பனிமூட்டம் கடும் குளிரிலும் ஏழுமலையான் தரிசனத்துக்கு திரளும் பக்தர்கள்: ஒரே நாளில் ரூ.4.23 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Ezhumalaiyan ,Tirumala ,Tirumala Ezhumalaiyan ,
× RELATED ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்