கலைஞர் கடன் திட்டத்தில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, நவ.6: கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகள் பெற குறு உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி(தாய்கோ வங்கி) காரைக்குடி கிளையில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த 7சதவிகித வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ரூ.20லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பெயரில் இக்கடன் வழங்கப்படும். கடன் பெற குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 65க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாய்கோ வங்கி கிளையில் கணக்கு வைத்து இருத்தல் வேண்டும்.

புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம். மேலும், பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 25சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10சதவீதமும் சொந்த மூதலீடாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடி, தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரிலோ அல்லது 94434 99188 என்ற செல் எண்ணிலோ, சிவகங்கையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 89255 33989 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் கடன் திட்டத்தில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: