இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அடக்கமான போர் வீரர், தென் கோட்டையை பிடித்து வைத்திருப்பவர் என புகழாரம்

டெல்லி : இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் இடம் பிடித்ததற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் அடக்கமான போர் வீரர், தென் கோட்டையை பிடித்து வைத்திருப்பவர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

மொழித் தடையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரது குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்ததன் மூலம் தென் இந்தியாவில் இண்டியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார் என்றும் இந்தியா டுடே பாராட்டியுள்ளது.

இதனிடையே இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கு முதல் இடத்தையும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத் 2ம் இடத்தையும் பிடித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா 3ம் இடத்தையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 4ம் இடத்தையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 6ம் இடத்தையும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 7ம் இடத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 8வது இடத்தையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 9வது இடத்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

The post இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அடக்கமான போர் வீரர், தென் கோட்டையை பிடித்து வைத்திருப்பவர் என புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: