×

20 கிமீ தூரத்தில் பணிமாறுதல் வழங்கியதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் தர்ணா

பெரம்பலூர், நவ.5: பாடாலூர் அரசு துவக்கப் பள்ளி சத்துணவு அமைப் பாளருக்கு 20 கிலோமீட்டர் தூரத்தில் பணி மாறுதல் வழங்கியதைக் கண்டித்து குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, பாடாலூர், அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி ஜெயந்தி(50). இவர் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வந்தார். இடையில் விடுப்பு எடுத்திருந்த இவரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர், 20கிலோமீட்டர் அப்பாலுள்ள பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்திலுள்ள திரவிய சகாய மானிய துவக்க பள்ளிக்கு பணிமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொள்ளாத சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி, அரசாணையின்படி 3கிமீ சுற்றளவுக்குள்தான் அமைப்பாளரை பணி மாறுதல் செய்யவேண்டும். ஆனால் எனக்குக் கொடுத்த பணி மாறுதல் உள்நோக்கத்துடன் உள்ளதால் தகுந்தகாரணம் தெரிவிக்கும்படி கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் நேற்று (4ம்தேதி) ஜெயந்தி தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே கிழக்குபே பகுதியில் தரையில் அமர் ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட் டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தபிறகு தனது முகாமிற்குச் செல்ல வெளியே வந்த கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம், ஜெயந்தி தனது புகார் தொடர்பாக முறையிட்டுள் ளார். அதனை விசாரணை செய்த கலெக்டர்,

தனது நேர்முக உதவியாளர் (சத்துணவு) கமலக் கண்ணன் என்பவரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு சென்றார். இருந்தும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கமலக் கண்ணன் அங்கு வந்து பதில் அளிக்கும் வரைகாத்திருந்த ஜெயந்தி குடும்பத்தார், மாலை 3 மணிக்கு பிறகு கமலக் கண்ணனே நேரில்வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து 3.45 மணி அளவில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post 20 கிமீ தூரத்தில் பணிமாறுதல் வழங்கியதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துடன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Perambalur ,Padalur government ,Perambalur district ,Aladhur taluka ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...