நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்

நாகப்பட்டினம்,நவ.5: நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் இல்லங்களை இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் கீழும், முதியோர் இல்லங்களை மூத்தகுடிமக்களுக்கானசட்டம் 2007-ன் கீழும், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் கீழும், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை மனநல பாதுகாப்புச் சட்டம் 2017-ன் கீழும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகளை தமிழ்நாடு பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைசட்டம் 2014-ன் கீழும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறுபதிவு செய்யாமல் செயல்பட்டுவரும் அனைத்துவகை இல்லங்களும் தங்களுக்கான அரசுதுறைகளான குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புசேவைகள் துறை, சமூகநலத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், ஆகியவற்றைதொடர்பு கொண்டு தங்களது இல்லங்களை பதிவுசெய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்கள் வாயிலாக வரும் 30ம் தேதி-க்குள் விண்ணப்பிக்க வேண்டும், பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்காமல் செயல்பட்டுவரும் இல்லங்களுக்கு சீல் வைத்து அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தகவல் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும் என நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: