முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.94,000 கோடி பங்குகளை விற்றதால் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்த தங்களது முதலீட்டை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சீன பங்குச்சந்தைக்கு திருப்பிவிட்டன. பொதுத்துறை வங்கிகள், வாகன நிறுவன பங்குகள், உருக்கு நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 7800 புள்ளிகள் சரிந்தது.
இந்திய பங்குச்சந்தையில் எதனால் சரிவு?
உள்நாடு மற்றும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்தியச் சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தையில் சோப்பு போன்ற அன்றாட பயன்பாட்டு பொருள்களின் விற்பனை கூட சரிந்துள்ளதால் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளது. சீனா பல பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அதிகரித்து உள்ளதால் அங்கு வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் மீள்வதற்கு வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்களின் 2-ம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நம்பிக்கை தருவதாக இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீன பங்குச்சந்தை உயரும் என்பதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அங்கு திருப்பி உள்ளன. பல நிறுவனங்களின் லாபம் 2-ம் காலாண்டில் குறைந்தள்ளதாலும் பங்குகளின் விலை சரிவதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் வாகன விற்பனையும் குறைந்துள்ளதால் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. டிரம்ப் வெற்றிபெற்றால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்துக்கணிப்பு நிலவுவதால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மீண்டும் வருமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அரங்கில் நீடித்து வரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளாலும் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிந்தன. 3 எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபமும் சரிந்து உள்ளதால் அவற்றின் பங்கு விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
டிரம்ப் வெற்றியை எதிர்பார்க்கும் பங்குச் சந்தை
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அது இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய வாகன தயாரிப்பு, உலோக தொழில், விசைத் துறைக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் அமெரிக்காவுக்கு 18% பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. மின்னணு சாதனங்கள், முத்து, வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், மருந்துப் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களும் ஓரளவு உருக்கு, ஜவுளி, வாகனங்களும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவுக்கு தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்டவற்றுக்கு இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. டிரம்ப் வெற்றி பெற்று, சீன பொருட்கள் மீது சுங்கவரி அதிகரிக்கப்பட்டால் இந்திய பொருட்களுக்கு சாதகமாக அமையும்.
The post மும்பை பங்குச்சந்தை வீழ்ச்சி; அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அது இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக இருக்கும்: நிபுணர்கள் appeared first on Dinakaran.