கேரளாவில் ரயில் மோதி சேலத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு ஒன்றிய அமைச்சருக்காக நடந்த தூய்மை பணியில் பலியான சோகம்

* ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு, டெண்டர் ரத்து ரயில்வே அறிவிப்பு

சேலம்: கேரளாவில் ஒன்றிய அமைச்சர் வருகைக்காக நடந்த தூய்மை பணியின்போது ரயில் மோதி சேலத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து உள்ளது தெரியவந்து உள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் கந்தல் அகற்றும் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிந்ததோடு, அந்த டெண்டரை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சொரனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பாரதப்புழா ஆற்றுப்பாலத்தில் செல்லும் ரயில்வே தண்டவாளம் வழியே நடந்து வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களான சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே அடிமலைபுதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (60), அவரது மனைவி வள்ளி (55), மற்றொரு லட்சுமணன் (48), அவரது மனைவி ராணி (45) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து பற்றி சொரணூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், விபத்தில் பலியான 4 பேரும் சொரணூர் ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்காக சாலை வழியை பயன்படுத்தாமல், உரிய பாதுகாப்பு ஏதும் இன்றி தண்டவாளம் வழியே நடந்து சென்றது தெரியவந்தது.  அதனடிப்படையில், அந்த தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்த ஒப்பந்ததாரரான மலப்புரத்தை சேர்ந்த முனவர் தோணிகடவத் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தண்டவாளத்தின் தூய்மையை பராமரிக்க, தண்டவாளத்தில் இருந்து கந்தல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே வழக்கமாக வழங்குகிறது. இதில், ரயில் பாதையில் வரும்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதையை விட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும். ஆனால், இந்த குறிப்பிட்ட வழக்கில், சொரணூர் யார்டு மற்றும் அணுகுமுறைகளில் கந்தல் எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 07.02.2023ல் ஒப்பந்ததாரர் முனவர் தோணிக்கடவத் என்பவருக்கு வழங்கப்பட்டது.

விபத்து நடந்த ஸ்டீல் பிளேட் காரிடர் பாலமான பாரதப்புழா பாலம், இந்த கந்தல் பறிக்கும் எல்லைக்குள் வராது. எல்.சி எண்.1 மற்றும் பாரதப்புழா ரயில்வே பாலத்தின் எர்ணாகுளம் அப்ரோச் இடையே உள்ள பகுதியில் உள்ள கந்தல்களை அகற்றும் பணி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. இதற்காக லெவல் கிராசிங் வழியாக நேரடி சாலை வசதி உள்ளது. பணி முடிந்ததும் சுமார் 10 பேர், சாலையை பயன்படுத்தாமல், மறுபுறம் ரயில் பாலத்தை கடந்து ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அதுவும் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அனுமதியின்றி சென்றிருக்கிறார்கள். அன்றைய தினம் பாலத்தில் ரயில்வே பணிகள் எதுவும் திட்டமிடப்படாததால், பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கிடைக்கவில்லை. வேக கட்டுப்பாடு இல்லாத பாதை வழியே வந்து கேரளா எக்ஸ்பிரஸ் மோதி துரதிர்ஷ்டவசமாக 4 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்திற்கு உரிய வழிமுறைகளை பின்பற்றாததே காரணமாகியுள்ளது. அதனால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பாதையில் ரயில்கள் வரும் என்பது தெரிந்தும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளனர். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், நேற்று (3ம் தேதி) கேரளாவில் கொச்சி முதல் கோழிக்கோடு வரை ரயில் பாதையை ஆய்வு செய்து, கோழிக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதற்காகவே கொச்சி முதல் கோழிக்கோடு வரை தண்டவாளத்தில் கந்தல் (துணிகள்) மற்றும் குப்பை அகற்றும் பணியை நேற்று முன்தினம் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அதில், சொரணூர் பகுதியில் குப்பை அகற்றிய 4 பேர், ரயில் மோதி பலியாகியுள்ளனர். இவர்கள், ரயில்வே ஆற்றுப்பாலத்தின் மறுமுனையில் பணியை முடித்துவிட்டு, விரைவாக ஸ்டேஷன் பகுதிக்கு வந்து தூய்மை பணியை மேற்கொள்ள இருந்துள்ளனர். அதற்காக தான், சாலையை பயன்படுத்தாமல் பாலத்தின் மீது வரும் தண்டவாளம் வழியே நடந்து வந்து உயிரை இழந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

* இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களான லட்சுமணன், வள்ளி, லட்சுமணன், ராணி ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்வதோடு, கருணைத்தொகையாக ரூ.1 லட்சம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

* வயிற்று பிழைப்புக்காக சென்றபோது சோகம்: உருக்கமான தகவல்
ரயில் மோதி 4 பேர் பலியான சம்பவம், சேலம், அடிமலைப்புதூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது. உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் விட்டு கதறினர். இதுபற்றி அவர்களது உறவினர்கள் கூறியதாவது: விபத்தில் பலியான அடிமலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணனுக்கும், வள்ளிக்கும் சண்முகம், குமார் என்று 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வள்ளியின் தம்பியான மற்றொரு லட்சுமணனும், அவரது மனைவியான ராணியும், ரயில் விபத்தில் பலியாகி உள்ளனர்.

அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் அனைவரும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை, ஆச்சாங்குப்பட்டி பகுதியில் தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வந்தனர். இங்கு வேலை சரியாக கிடைக்கவில்லை. இதனால், பிழைப்பு தேடி கேரளாவுக்கு சென்றனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கிடைத்த வேலைகளை செய்து வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவியான லட்சுமணனும், ராணியும் ஆச்சாங்குட்டப்பட்டிக்கு வந்து உறவினர்களை சந்தித்து விட்டு சென்றனர்.

இப்போது அவர்கள் பலியான செய்தி தான் கிடைத்துள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து நிறைய கூலித்தொழிலாளர்கள் சமீப காலமாக கேரளா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். அங்கு போதிய வேலைகள் கிடைக்காததால், கிடைத்த வேலைகளை செய்து வயிற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அபாயம் உணராமல் பிழைப்புக்காக அவர்கள் செய்த வேலை, உயிர் போவதற்கு காரணமாகி விட்டது. பிழைக்க ேபான 4 பேரையும், சடலமாக பார்ப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. உயிரிழந்தவர்களுக்கு கேரள அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post கேரளாவில் ரயில் மோதி சேலத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு ஒன்றிய அமைச்சருக்காக நடந்த தூய்மை பணியில் பலியான சோகம் appeared first on Dinakaran.

Related Stories: