வருகிற டிசம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடந்தது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து 3 நாள் விவாதம் நடந்தது. தொடர்ந்து 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டத்தொடரில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் பிப்ரவரி 22ம் தேதி நடந்த விவாதத்துக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை கடந்த மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும், நடைபெறும் மானிய கோரிக்கை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 2024-25ம் ஆண்டிற்கான மானியகோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் கடந்த ஜூன் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இந்த கூட்டம் ஜூன் 29ம் தேதி வரை நடந்தது. வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், வருகிற டிசம்பர் மாதம் மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு விரைவில் அறிவிப்பார். இந்த கூட்டம் 4 முதல் 5 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

The post வருகிற டிசம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: