தீவிபத்து ஏற்பட்ட 7 ஆண்டுகளுக்கு பின் குரங்கணி – சாம்பலாறுக்கு மீண்டும் ட்ரெக்கிங் அனுமதி: மலையேற்ற பிரியர்கள் ஆர்வம்

போடி: போடி அருகே குரங்கணியிலிருந்து சாம்பலாறு முட்டம் வரை 5 கிமீ மீண்டும் ட்ரெக்கிங் செல்ல 7 ஆண்டுக்கு பிறகு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சாகச பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 24ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையை வெளியிட்டு இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யேக இணைய வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கும் வலுசேர்க்கும் விதமாகவும் இந்த தமிழ்நாடு மலையேற்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி கொட்டக்குடி மற்றும் டாப் ஸ்டேஷன் வரை உள்ள பகுதி ட்ரெக்கிங் செல்லும் மலைச்சாலையாக இருக்கிறது.

குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டில் 39 பேர் கொண்ட 2 குழுக்கள் கொழுக்குமலை பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்ட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரை ட்ரெக்கிங் அனுமதி இல்லாமல் முடங்கி கிடந்தது.

இதற்கிடையில் தமிழகத்தில் 40 இடங்களில் சுற்றுலாப்பயணிகள் உட்பட ட்ரெக்கிங் செல்ல அனுமதி அளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் குரங்கணி முட்டம் சாலையில் சாம்பலாறு வரை 5 கிமீ தூரம் ட்ரெக்கிங் பகுதியாக அறிவித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேற்றம் வழிகள் எளிதான, மிதமான, கடினமான என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் மலையேற்றம் செய்ய சின்னச்சுருளி – தென்பழனி(மிதமானது), காரப்பாறை(எளிது), குரங்கனி சாம்பலாறு(மிதமானது). பழங்குடியினர் மற்றும் உள்ளூர் கிராம வாசிகள் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு, கிராம வனக்குழு உறுப்பினர்கள் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரங்கணி – சாம்பலாறுக்கு மீண்டும் ட்ரெக்கிங் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மலையேற்ற பிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.

The post தீவிபத்து ஏற்பட்ட 7 ஆண்டுகளுக்கு பின் குரங்கணி – சாம்பலாறுக்கு மீண்டும் ட்ரெக்கிங் அனுமதி: மலையேற்ற பிரியர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: