பாரமதி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள மகாயுதி கூட்டணியும், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவார் கோவிந்த்பாக்கில் உள்ள அவரது வீட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு தருவதற்காக காவல்துறை வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. ஆளும் கட்சி வேட்பாளர்கள் நிதியுதவி வாங்குவது, அதற்கு காவல்துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுவது பற்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. அதுபற்றி பகிரங்கமாக பேச விரும்பினாலும், அவ்வாறு பேசுவது எங்களுக்கு தகவல் சொன்னவர்களை பாதிக்கும் என்பதால் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
ஆபாச பேச்சு: உத்தவ் கட்சி எம்பி மன்னிப்பு கேட்டார்
பாஜவில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மாறிய ஷைனா என்சி, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மும்பாதேவி தொகுதியில் போட்டியிடுகிறார்.அவரை சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி அரவிந்த் சாவந்த், ‘செக்ஸ் பாம்’ என விமர்சித்தார். அவர் மீது போலீசார் 79 மற்றும் 356(2) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அரவிந்த் சாவந்த் எம்பி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
The post மகாராஷ்டிரா பேரவை தேர்தல்; ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு போலீஸ் வாகனங்களில் பணம்: சரத்பவார் பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.