×

அமெரிக்காவை ஆளப் போவது யார்? இன்னும் 3 நாளில் விறுவிறு வாக்குப்பதிவு, கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி

உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போவது யார் என்பதை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் 3 நாளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில், இந்திய வம்சாவளியும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.

இதில், அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் பைடன் களத்தில் இருக்கும் வரை, டிரம்ப்பின் கை ஓங்கியிருந்த நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாற்றப்பட்ட பிறகு நிலைமை மாறியது. டிரம்ப்புடனான நேரடி விவாதத்தில் கமலா ஹாரிசின் படபட பதில்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. இதனால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றார்.

எனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக காணப்படுகின்றன. அவர் வெல்லும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளையும் படைப்பார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் வெள்ளை மாளிகையில் நுழைவார். இதுவரை 2016ல் ஹிலாரி கிளிண்டன் மட்டுமே பெண் வேட்பாளராக தேர்தலை சந்தித்துள்ளார். அதிலும் அவர் டிரம்ப்பிடம் மண்ணை கவ்வினார். இதனால் கமலா ஹாரிஸ் வெல்லும் நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்படும்.

மேலும், அமெரிக்க அதிபராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையும் கமலா ஹாரிசுக்கு கிடைக்கும். அதே சமயம் டிரம்ப்பை பொறுத்த வரையில் தொழிலதிபர்களின் ஆதரவை பெற்றுள்ளார். குறிப்பாக, உலக நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப்புக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் கமலாவிடம் பின்தங்கிய டிரம்ப் பின்னர் கடும் போட்டியாளராக மாறியிருக்கிறார். எனவே டிரம்ப் வெல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், இம்முறை அதிபர் தேர்தல் முடிவு கணிக்க முடியாததாகவே உள்ளது.

கிட்டத்தட்ட 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி தங்கள் வாக்கை செலுத்தி விட்டனர். தபால் மூலமாகவும் வாக்குகளை செலுத்தலாம். முதியவர்கள், தேர்தல் நாளன்று பணி நிமித்தம் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் உள்ளிட்டோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி மூலம் 81 வயதான அதிபர் ஜோ பைடனும் ஏற்கனவே தனது வாக்கை செலுத்திவிட்டார்.

இத்தகைய வசதி தந்தும், கடந்த 2020ல் தான் கடந்த 100 ஆண்டில் அதிகபட்சமாக 66.6 சதவீத வாக்குகள் பதிவானது. இம்முறை கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் அதிகாலையில் அமெரிக்காவின் 47வது அதிபர் யார் என்பது தெரியவரும்.

* இந்தியர்கள் யாருக்கு ஆதரவு?
இந்திய வம்சாளியான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டுமென்பதில் பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் விருப்பம் கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கடந்த முறை டிரம்ப்புக்கு வாக்களித்த பலரும் இம்முறை கமலாவுக்கு தான் தங்களின் வாக்கு என கூறி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 52 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஏஏபிஐ எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 55 சதவீத இந்திய அமெரிக்கர்கள் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 26 சதவீதத்தினர் மட்டுமே டிரம்ப்பை ஆதரித்துள்ளனர். கார்னெகி எண்டோவ்மென்ட் எனும் மற்றொரு நிறுவனம் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், 61 சதவீத இந்தியர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 32 சதவீத இந்தியர்கள் டிரம்ப்பை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பெண்களில் 67 சதவீதம் பேரின் ஓட்டு கமலாவுக்கு தான் என கூறி உள்ளனர்.

* 1.4% கமலா முன்னிலை
கடந்த அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, அதிபர் தேர்தல் கணிப்பில், கமலா ஹாரிஸ் 1.4 சதவீத முன்னிலையில் உள்ளார். அவர் 48.1% மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். அதுவே டிரம்ப்புக்கு 46.7 சதவீத ஆதரவு உள்ளது. 5.2 சதவீத மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கணிப்புகளை பொறுத்த வரையில் கமலாவுக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

* ‘7 போர்க்களங்கள்’
பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. இதில் இழுபறி நிலவும் 7 மாகாணங்கள் போர்க்களங்களாக கருதப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை போர்க்கள மாகாணங்களாக உள்ளன.

அரிசோனாவில் 11, ஜார்ஜியாவில் 16, மிச்சிகனின் 15, நெவாடாவில் 6, வடகரோலினாவில் 16, பென்சில்வேனியாவில் 19, விஸ்கான்சினில் 10 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கின்றன. இம்மாகாணங்களில் கமலா ஹாரிசும் டிரம்பும் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்துள்ளனர்.

* தேர்தல் எப்படி நடக்கும்?
மற்ற குடியரசு நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்க அதிபர் தேர்தல் வித்தியாசமான முறையில் நடக்கும். இங்கு அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் (எலக்ட்ரால் காலேஜ்) இருக்கும்.

உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. மொத்தமுள்ள 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டன் டி.சி. யை சேர்த்து 538 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். இதில் 270 பிரதிநிதிகள் வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார்.

வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து பிரதிநிதிகள் வாக்குகளும் வழங்கப்படும். இந்த தேர்தல் மூலமாக அதிபர் மட்டுமின்றி துணை அதிபர், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில் 34 எம்பிக்கள், பிரதிநிதிகள் அவையில் மொத்தமுள்ள 435 எம்பிக்கள், 13 மாகாண ஆளுநர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்படுவார்கள்.

* பல நாடுகளின் தலையீடு
அமெரிக்காவின் அதிபர் என்பவர் அமெரிக்க மக்களின் தலைவிதியை மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர். அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்துதான், இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல், ஈரான் உரசல், சீனா, தைவான் விவகாரம் என பல்வேறு விஷயங்களின் தலையெழுத்து எழுதப்படும். டிரம்ப் அதிபராகும் பட்சத்தில் இஸ்ரேலின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். பாலஸ்தீனர்களின் எதிர்காலம் இருண்ட காலமாகி விடும்.

ஈரான், வடகொரியா விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்ரேல், ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளின் உளவுத்துறைகள் பல்வேறு ரகசிய வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மக்களின் மனதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப உதவியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மறைமுகமாக தலையிடக் கூடும்.

The post அமெரிக்காவை ஆளப் போவது யார்? இன்னும் 3 நாளில் விறுவிறு வாக்குப்பதிவு, கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : America ,Kamala Harris ,Trump ,Americans ,United States ,
× RELATED அமெரிக்காவின் தேசிய பறவை வழுக்கை கழுகு: அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்