வாஷிங்டன் : அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் லாஸ் வேகாஸ் நகரில் அவரது ட்ரம்ப் சர்வதேச ஹோட்டலுக்கு வெளியே பேட்டரி எலெக்ட்ரிக் கார் வெடித்து சிதறியது. உயர் தொழில்நுட்பம் கொண்ட அந்த கார் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.
கார் வெடித்து சிதறியதால் அதற்குள் இருந்த ஓட்டுநர் உயிரிழந்தார். அருகில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். சுக்கு நூறாக வெடித்த சைபர்டிராக் ரகமான பேட்டரி எலெக்ட்ரிக் கார், தொழில் அதிபரும் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளருமான எலான் மஸ்க் நிறுவனமான டெஸ்லா நிறுவன தயாரிப்பு ஆகும். லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஹார்லியன்ஸ் நகரில் உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டத்திற்குள் காரை மோதவிட்டு 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே இது தீவிரவாத தாக்குதலா அல்லது தொழில் நுட்ப கோளாறா என்ற கோணத்தில் அமெரிக்காவின் புலனாய்வு முகமையான எஃப்பிஐ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. வெடித்துச் சிதறிய காரை கொலராடாவில் மர்ம நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்தது உறுதியாகி உள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
The post டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதறியது : 20-ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு எச்சரிக்கையா? appeared first on Dinakaran.