நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லூசியானா மாகணம் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான போர்பன் என்ற சாலையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் விதமாக மக்கள் கூடியிருந்தனர். மேலும் அருகே சூப்பர்டோம் என்ற இடத்தில் நடக்கும் கால்பந்து போட்டியை காணவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.15 மணியளவில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் அங்கு குழுமியிருந்த மக்களை சுட்டு கொண்டே, மக்கள் மீது காரை வேகமாக மோதினார். பின்னர் அந்த நபர் காரை விட்டு இறங்கி அங்கிருந்த காவல்துறையினரையும் துப்பாக்கியால் சுட்டார். காவல்துறை பதிலுக்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் காரை ஓட்டி வந்த மர்ம நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். “இது ஒரு பயங்கரவாத தாக்குதல்” என நியூ ஆர்லியன்ஸ் மேயர் லாடோயா கான்ட்ரெல் கூறி உள்ளார். அதேபோல் தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரிப்பதாக எப்பிஐ கூறி உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அமெரிக்காவில் பயங்கரம் புத்தாண்டு கூட்டத்தில் கார் புகுந்து 10 பேர் பலி: தீவிரவாத தாக்குதலா? என விசாரணை appeared first on Dinakaran.