சென்னை: விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. அதற்கான 25 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. ஸ்பேட்எக்ஸ் எனும் திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய விண்கலன்கள் ஏவப்படவுள்ளன. இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமார் 470 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும்.
நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் மற்றும் இயக்கம் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியமாக உள்ளது. ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் இது உதவும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.
தொடர்ந்து ராக்கெட்டுடன் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு, ராக்கேட்டில் எரிப்பொருள் நிரப்பப்பட்டு ஏவுதலாக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. மேலும் ராக்கெட் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
The post விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேட்எக்ஸ் திட்டம் பிஎஸ்எல்வி சி – 60 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 25 மணிநேர கவுன்டவுன் தொடக்கம் appeared first on Dinakaran.