- ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி
- ராமநாதபுரம்
- மாரிமுத்து
- Uchipuli
- மண்டபம்
- இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- கிருஷ்ணவேணி
ராமநாதபுரம், டிச.25: மண்டபம் அருகே உச்சிப்புளியை சேர்ந்தவர் மாரிமுத்து(73). கூலி தொழிலாளி. இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது மனைவி கிருஷ்ணவேணி தங்கி உதவி செய்து வந்தார். சிகிச்சை பலனின்றி மாரிமுத்து நேற்று முன்தினம் உயிரிழந்தார். கணவர் இறந்ததை அறிந்து உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மருத்துவர்களிடம் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
இதனையடுத்து மாரிமுத்துவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணை மட்டும் தானமாக வழங்கலாம் என பரிந்துரை செய்தனர். இதனையடுத்து கிருஷ்ணவேணியின் அனுமதியுடன் கண்தானம் பெறப்பட்டது. மேலும் உடல் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வகத்திற்கு வழங்கப்பட்டது. இது குறித்து கிருஷ்ணவேணி கூறும்போது, உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருவதை அறிந்தேன்.
இதனையடுத்து இறந்து போன எனது கணவர் உடல் மண்ணில் தான் புதைக்க வேண்டும், இறந்த பிறகு யாருக்காவது உதவியாக இருக்கட்டும் என்ற நோக்கில் கண் தானமும், உயிர்காக்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களின் படிப்பிற்காக ஆய்வக பயன்பாட்டிற்கு உடலையும் தானமாக வழங்கினேன் என்றார். கணவர் உடலை தானமாக வழங்கிய கிருஷ்ணவேணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
The post ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிக்கு கணவர் உடலை தானமாக வழங்கிய மூதாட்டி appeared first on Dinakaran.