நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் மூலவைகையில் நீர்வரத்து குறைந்தது: விவசாயிகள் ஏமாற்றம்

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மூல வைகை ஆறு உருவாகிறது. இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்திகிராமம், நொச்சி ஓடை, ஐந்தரைப்புலி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் மூலவைகையில் நீர்வரத்து ஏற்படும். இந்த தண்ணீர் மூலம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மூல வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர்.

மேலும் மூல வைகை ஆற்றில் செல்லும் தண்ணீர் குன்னூர் அருகே, பெரியாற்றில் கலந்து வைகை அணையில் தேங்குகிறது. இந்த ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மூல வைகை ஆற்று தண்ணீர் மூலம் நெல், கரும்பு, வாழை, தென்னை, இலவம் உள்ளிட்ட சாகுபடிகள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த வாரத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. வைகை அணையின் நீர் மட்டமும் 60 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மட்டுமே லேசான மழை பெய்ததால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இது பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

The post நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் மூலவைகையில் நீர்வரத்து குறைந்தது: விவசாயிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: