இத்தேர்வை எழுத 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் மட்டுமே எழுதினர். தொடர்ந்து குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காலி பணியிடங்கள் எண்ணிக்கையை அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி அதிகரித்து வந்தது. இதனால் குரூப் 4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனால் தேர்வு முடிவை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருந்து வந்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ரிசல்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் 559 அதிகரித்துள்ளது. இதன் மூலம் குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.inல் அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல், கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* இதுவே முதல்முறை
குருப்4 எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடந்தது. தேர்வு முடிந்த 92 அரசு வேலை நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுற்று 92 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
The post 15.88 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு: காலிப்பணியிட எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்தது appeared first on Dinakaran.