அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டியூசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடைபெற்று வரும் கூட்டுறவு கொண்டாட்டம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பெரிய கருப்பன் அளித்த பேட்டி: மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம் பருப்பு-200கிராம், கடலை பருப்பு-200 கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25 கிராம், சீரகம்-25 கிராம், வெந்தயம்-50 கிராம், கடுகு-50 கிராம், சோம்பு-50 கிராம், நீட்டு மிளகாய்-100 கிராம், தனியா-100 கிராம், புளி-100 கிராம், ரவை-100 கிராம், ஏலக்காய்-5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எலைட் தொகுப்பில் துவரம் பருப்பு-250 கிராம், உளுத்தம் பருப்பு-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், வறுகடலை (குண்டு)-200 கிராம், மிளகு-50 கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-50 கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50 கிராம், நீட்டு மிளகாய்-250 கிராம், தனியா-200 கிராம், புளி-100 கிராம், ரவை-100 கிராம், ஏலக்காய்-5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தைப் பிடிக்கின்றதோ அதேபோல இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த “அதிரசம்-முறுக்கு காம்போ” தொகுப்பில் பச்சரிசி மாவு-500 கிராம், பாகு வெல்லம்-500 கிராம், ஏலக்காய்-5 கிராம், மைதா மாவு-500 கிராம்,அரை லிட்டர் எண்ணெய் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.190 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த தொகுப்புகள் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையின் 107 நிறுவனங்கள் மூலமாக 166 பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 கோடிக்கு விற்பனை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: