தீபாவளி மின் அலங்கார பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்த கூலித்தொழிலாளி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக பலியானார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தியாவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளிக்காக புது உடைகள், இனிப்பு, பலகார வகைகளை வாங்குவதில் மக்களின் உற்சாகம் களைகட்டியுள்ளது.

அதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகளில் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் ஒப்பந்த பணியை, ஒரு தனியார் நிறுவனத்திடம் சென்னை விமானநிலைய நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதன்படி, சென்னை விமானநிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியார் ஒப்பந்த நிறுவன கூலித்தொழிலாளர்கள் மின் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் டெர்மினல் 2 எனும் சர்வதேச விமான முனைய 2வது தளத்தின் மேல்பகுதியில் நேற்று அலங்கார மின்விளக்குகளை தொங்கவிடும் பணியில் திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (26) என்ற கூலி தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.

இப்பணியின்போது மதியம் 2.30 மணியளவில் 2வது தளத்தின் மேல்பகுதியில் மின்விளக்குகளை செல்வம் தொங்க விடும்போது, திடீரென நிலைதடுமாறி சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த செல்வத்தை சக கூலித் தொழிலாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கூலித்தொழிலாளர் செல்வம் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்விளக்கு அலங்காரப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன நிர்வாகிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற உயரமான கட்டிடங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள், பாதுகாப்பு கவசமாக தலையில் ஹெல்மெட் அணிய வேண்டும். அதோடு, மிக உயரமாக அந்தரத்தில் தொங்கியபடி வேலை செய்யும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்திருக்க வேண்டும். அதோடு, அப்பகுதியை சுற்றிலும் வலைகள் கட்டியிருக்க வேண்டும் என்று விதி உள்ளது. எனினும், இதுபோன்ற எந்த விதிமுறையும் அமல்படுத்தாமல், சென்னை விமான நிலையத்தில் மின்விளக்கு அலங்காரப் பணிகளில் ஒப்பந்த கூலித்தொழிலாளர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்தும் போலீசார் மற்றும் விமானநிலைய நிர்வாகத் தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னை விமானநிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

The post தீபாவளி மின் அலங்கார பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: