திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் விஷவாயு கசிந்து 42 மாணவிகள் மயக்கம்: பெற்றோர், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு சிகிச்சை

சென்னை: சென்னை திருவொற்றியூரில் பிரபலமான தனியார் பள்ளியில் விஷ வாயு கசிந்து 42 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.  திருவொற்றியூர் கிராம தெருவில் விக்டோரியா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டிடத்தின் 3வது தளத்தில் 8, 9, 10 ஆகிய வகுப்பறைகள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டது.

இந்நிலையில், மதியம் 2 மணிக்கு, வகுப்பறையில் கடுமையான துர்நாற்றம் வீசியதால், மாணவிகள் சிலருக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அனைத்து மாணவிகளும் இருமலோடு, வாந்தியும் எடுக்க தொடங்கியுள்ளனர். சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதேபோல் அடுத்தடுத்த வகுப்பிலும் மாணவிகளுக்கு வாந்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சக ஆசிரியர்கள் 3வது மாடிக்கு ஓடிசென்று மாணவிகளுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தடுத்து சுமார் 42 மாணவ, மாணவியர் பள்ளியில் இருந்து வரிசையாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார், பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பள்ளி வளாகத்தில் இருந்து ஒருவிதமான கடுமையான துர்நாற்றம் வெளிப்பட்டதாகவும், அதனால் மாணவ, மாணவியர் வாந்தி மயக்கத்தில் பாதிக்கப்பட்டதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனிடையே, தகவலறிந்த 500க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளி முன் திரண்டனர். பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால், பெற்றோர் சிலர் குழுவாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெற்றோரை சமாதானம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். சிகிச்சையில் இருந்த மாணவிகளை பார்க்க மருத்துவர்கள் அனுமதித்தனர். சிறிது நேர சிகிச்சைக்கு பின் முதல்கட்டமாக 10 மாணவிகள் பத்திரமாக அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக பெரும்பாலான மாணவிகளை பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக மேற்கு பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர். மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுகாதாரத் துறை தீயணைப்பு, தடவியல் நிபுணர்கள், வருவாய்த்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை குழு போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் செப்டிங் டேங்க், பள்ளி ஆய்வகம், கேஸ் இணைப்பு, பாதாள சாக்கடை ஆகியவற்றையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஆனால் எவ்வாறு விஷவாயு வெளியானது என்று தெரியவில்லை என்று கூறப்பட்டது. பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘எங்கள் பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் எந்த பிரச்னையும் இல்லை. வெளியில் இருந்து விஷவாயு பரவியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை’’ என அவர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு வெளியேறி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* மூடி மறைத்த பள்ளி நிர்வாகம் பெற்றோர் புகார்
பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளியில் கடந்த 3 நாட்களாகவே இதுபோன்ற துர்நாற்றம் வீசுவதாக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை ஆசிரியர்களும், நிர்வாகமும் அலட்சியப்படுத்தியுள்ளனர். பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்க்கும் இடையே 3 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. அதில்கூட எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.

டிவியில் வந்த தகவலை பார்த்துதான் நாங்கள் பள்ளிக்கு ஓடி வந்தோம். அப்போது கூட ஆசிரியர்கள் சரியான பதிலை கூறவில்லை. பள்ளி நிர்வாகமும், பள்ளியின் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காக மாணவிகளை மிரட்டியும், எங்களுக்கு தகவல் சொல்லாமலும் மறைத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் விஷவாயு கசிந்து 42 மாணவிகள் மயக்கம்: பெற்றோர், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: