திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது சோகம் கார் மீது அரசு பஸ் மோதி 3 பேர் பலி

*4 பேர் படுகாயம்

திருமலை : திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது கார் மீது அரசு பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் ஷரப் பஜாரைச் சேர்ந்த தங்க வியாபாரியும் தனியார் லாட்ஜ் உரிமையாளருமான காமிஷெட்டி குருவய்யா. இவருக்கு ராஜேஷ், மகேஷ், ஜெகதீஷ் என மூன்று மகன்கள் உள்ளனர். ராஜேஷ் மகள் சிறீசந்தனாவுக்கும் (வழக்கறிஞர்) திருப்பதியைச் சேர்ந்த ரோஹித்துக்கும் கடந்த 20ம் தேதி கர்னூலில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நேற்று திருப்பதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் நேற்றுமுன்தினம் கர்னூலில் இருந்து வாகனங்களில் புறப்பட்டனர். இவர்கள் கார் அன்னமையா மாவட்டம் ரயில்வே கோடூர் ராஜா நகரம் அருகே வந்த போது திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ஆர்டிசி ஏ.சி.பஸ் மோதியது.

இதில் கார் மற்றும் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில், புதுப்பெண்ணின் சித்தி முறையான சுசித்ரா(49), அவர்களது உறவினர்கள் கலாக்ஷேத்ரா தனியார் சில்க் ஹவுஸ் உரிமையாளர் பிரேம் (55), அவரது மனைவி வாசவி (45) ஆகியோர் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க வேண்டிய வீட்டில் சோகத்தை ஏற்பட்டுத்தியது. இதுகுறித்து ரயில்வே கோடூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது சோகம் கார் மீது அரசு பஸ் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: