சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசம் இல்லை. எந்த நிலத்தையும் தீட்சிதர்கள் விற்கவில்லை. அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. கோயில் நிலங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். தொடர்ந்து, கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை கோயில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அறநிலையத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, அறிக்கையில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, அறநிலையத் துறை தரப்பு அறிக்கைக்கு பதில் அளிக்குமாறு பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: