மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 31 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயினருவி, சினி பால்ஸ், ஐந்தருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 29,850 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 7,500 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 29 நாட்களுக்கு பிறகு நேற்று காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 98.56 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 100.01 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.85 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது appeared first on Dinakaran.

Related Stories: