திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை புதூர்நாடு மலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு


திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே புதூர்நாடு மலையில் இன்று காலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மலையில் உள்ள கற்களும் சாலையில் விழுந்ததால் ேபாக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாதுமலை உள்ளது. இதில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட 32 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருப்பத்தூரில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த மலையில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மலைப்பாதை வழியாக திருப்பத்தூருக்கு தினமும் வந்துசெல்கின்றனர். கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவும் ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அருவி போல் மழைநீர் கொட்டியது. இதனால் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை புதூர்நாடு செல்லும் வழியில் அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பெரிய பெரிய கற்களும் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண் சரிவால் போக்குவரத்து பாதித்ததால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருப்பத்தூரில் இருந்து புதூர்நாடு மலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்தனர். ஜேசிபி மூலம் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி விரைந்து முடியும் என்றும் அதன்பிறகு போக்குவரத்து தொடங்கும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர்-புதூர் நாடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை புதூர்நாடு மலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: