இந்த பேரூராட்சியில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், விவசாயிகளும் அடங்குவர். இந்த பேரூராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகள், கட்டிடங்கள் போன்றவை கட்டப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், அரசுக்கு சொந்தமாக சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டு திடல் என பேரூராட்சி மக்களுக்கான பல்வேறு தேவைகள் செய்து தரப்படாமல் உள்ளது.
இந்நிலையில், பேரூராட்சியில் மட்டும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட்டுகள் போடப்பட்டு வருகின்றன. பிளாட்டுகளுக்கு அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சில இடங்களில் நீர்நிலைகளும், கால்வாய்களும் கூட ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இதனால், சில குடியிருப்பு பகுதிகள் மழை காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள அரசு நிலங்களை பேரூராட்சி நிர்வாகமும் வருவாய் துறையும் இணைந்து மீட்டெடுத்தால் பேரூராட்சிக்கு வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்த பல்வேறு வகையில் வழிவகைகளை செய்ய இயலும், ஆனால் வருவாய் துறையினரும் பேரூராட்சி நிர்வாகமும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பினை மீட்டெடுக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆக்கிரமிப்பினை அகற்றிட உத்தரவு பெறப்பட்டது.
அப்போது, வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டரும் மேற்படி ஆக்கிரமிப்பு தொடர்பான நேரடி விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி அரசு நிலத்தினை மீட்டெடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு சுமார் 4 மாத காலம் ஆகியும் இது வரை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தினை மீட்டெடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறனர்.
இது போன்ற வருவாய்த்துறையினர் இந்த செயலானது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் உத்திரமேரூர் வருவாய்த்துறையினரின் மெத்தனப்போக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அரசு நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆக்கிரமிப்புக்கு துணைப்போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது’ என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டு அரசு நிலங்களை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post உத்திரமேரூரில் ஆக்கிரமிப்பின் பிடியிலுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.