கோடியக்கரையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வேதாரண்யம்: கோடியக்கரை சரணாலயத்தில் சீசன் துவங்கி உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து பறவைகள் குவிந்துள்ளது. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனஉயிரின சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களை அக்டோபர் முதல் மார்ச் முடிய சீசன் காலத்தில் காணலாம். ரஷ்யா, ஈரான், ஈராக், சைபீரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை இந்த சரணாலயத்தின் தனி சிறப்பு.

பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கானக்கான வகை பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. குறிப்பாக ஆர்டிக் பிரேதேசத்தில் இருந்து 47 வகை உள்ளான் இங்கு வருகிறது. அதில் கொசு உள்ளான், பச்சை கால் உள்ளான், சிகப்பு கால் உள்ளான், பவளக்கால் உள்ளான் வகைகள் அதிக அளவில் வருகிறது. இலங்கையில் இருந்து கடல் காகம், கடல் ஆலா, ஈரான், ஈராக்கில் இருந்து வரும் கூழை கிடா உள்ளிட்ட பறவைகள் சீசன் காலத்தில் அதிக அளவில் வந்து செல்கின்றன. இங்கு 290 வகையான பறவை இனங்களை ஒரே இடத்தில் காண முடியும். பூநாரை போன்று பல்வேறு வகையான பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இங்கு வருகின்றன.

இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல் கூறுகையில், ‘வழக்கமாக அக்டோபர் முதல் மார்ச் வரை பறவை சீசன் காலம். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை சுற்றுலா பயணிகள் காணலாம். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பைனாகுலர், வழிகாட்டி, வாகன வசதி உள்ளிட்ட அனைத்தும் வனத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 10 லட்சம் பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வந்து செல்லும். கடந்தாண்டு வந்த பறவைகளில் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் பூநாரை, கூழை கிடா, உள்ளான் வகைகள் ஆயிரக்கணக்கானவை இங்கயே தங்கி உள்ளன. இந்த ஆண்டு தற்போது பூனாரை, செங்கல் நாரை, கூழைக்கடா, கரண்டி மூக்கு நாரை மற்றும் 25க்கு மேற்பட்ட வகைகள் வந்துள்ளன என்றார்.

The post கோடியக்கரையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: