ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

பெரம்பலூர், அக்.18: ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் பயிலும் 10ம்வகுப்பு மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ் வரவேற்றார். இதில் திருச்சி மண்டல ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவிஇயக்குனர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மற்றும் உடலின் முக்கியத்துவத்தை பற்றியும், மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள், கல்வி உதவித் தொகை மற்றும் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார் கலந்துகொண்டு, மாணவ, மாணவியர் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப் பெண்களை மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், அதற்கான வழி முறைகள் குறித்தும், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் அளிக்கப்படும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்தும், உயர் கல்வியின் அவசியம் குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, நாகராஜன், பாலகணேசன், அதியமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

The post ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: