மழையின்போது மின் கம்பங்கள், மின்மாற்றிக்கு அருகில் நிற்கக்கூடாது

 

செய்யாறு, அக். 16: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்யாறு மின் கோட்டம் செயற்பொறியாளர் வி.கிருஷ்ணன், வடகிழக்கு பருவமழை குறித்து செய்யாறு பொதுமக்கள் மின்சாரம் குறித்து விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மக்கள் எதிர்வரும் வடகிழக்கு பருமழை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின் விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என மின்வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மழை, மின்னல், காற்று காலங்களில் பொது மக்கள் மின்சார கம்பங்களுக்கு மின்சார பாதைக்கு, மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் உரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளவேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகில் செல்லக்கூடாது மற்றவர்களையும் செல்ல விடாமல் காத்து, அருகில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்திட வேண்டும். தரமான ஐஎஸ்ஐ சான்றுள்ள மின் சாதன பொருட்களை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். மின் பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு செய்திடும் வண்ணம் தங்கள் வீட்டில் கட்டுமானங்களில் நிலகசிவு மின்திறப்பான் பொருத்திட வேண்டும். வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்ல வேண்டாம். பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழாகவே நிறுத்த வேண்டாம். மின் பழுது மற்றும் மின் குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து சேவைமையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மழையின்போது மின் கம்பங்கள், மின்மாற்றிக்கு அருகில் நிற்கக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: