நான்கு மாதங்களாக குடிநீர் வரவில்லை கிராம மக்கள் பாதிப்பு

 

சாயல்குடி, அக்.16: முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்திற்கு 4 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வராததால், குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கீழச்சாக்குளம் கிராமமக்கள் கூறும்போது, கடலாடி ஒன்றியம், கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்திற்கு கடந்த 4 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் முதுகுளத்தூர், கடலாடி சாலையோரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாயில் இருந்து கசியும் நீரை மணிக்கணக்காக காத்து கிடந்து தண்ணீர் பிடித்து, குடங்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்செல்லும் நிலை உள்ளது. மேலும் டேங்கர் லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.10 விலை கொடுத்து வாங்கி குடித்தும் வருகிறோம்.

தற்போது மழை பெய்து வருவதால் பெரியவர்கள் விவசாய பணிகளை செய்வதற்காக வயற்காட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் சிறுவர்கள் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த சாலையோரம் தண்ணீரை பிடித்து வரும்போது சிறிய கவனக்குறைவு ஏற்பட்டால் கூட விபத்து அபாயம் உள்ளது. எனவே கீழச்சாக்குளம் கிராமத்திற்கு தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post நான்கு மாதங்களாக குடிநீர் வரவில்லை கிராம மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: