ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயன்பாடற்ற டயர்களால் சுகாதார சீர்கேடு: சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயன்பாடற்ற டயர்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்க மழைக்காலத்திற்கு முன்பாக டயர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தின் மையப்பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெப்பக்குள தெரு, மேலக்கோட்டை வாசல் தெரு, சிவன் கோயில் தெரு, சன்னதி தெரு என பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உட்பகுதியில் பயன்பாடற்ற டயர்கள் அதிக அளவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, அந்த தண்ணீரில் சிக்குன்குனியா, டெங்கு ஆகிய நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு பல்கி பெருகி வருகின்றன.

மேலும் டயர் குவியல் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக ஆண்டுதோறும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுபோல் தற்போதும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அதிக அளவிலான டயர்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், வீடுகளில் மழைநீர் தேங்கும் நிலையில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள், குப்பைகள் இருக்கக் கூடாது, அவற்றை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் வீடு வீடாக சென்று வலியுறுத்து வரும் நிலையில் மழைக்காலங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களில் தேங்கும் தண்ணீரால் மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சேகரித்து வைக்கப்பட்டுள்ள டயர்களை மழைக்காலத்திற்கு முன்பாக உடனடியாக அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயன்பாடற்ற டயர்களால் சுகாதார சீர்கேடு: சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: